பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக - குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் தொட்டி அமைக்க திட்டம் : தயக்கம் வேண்டாம் என மாநகராட்சி கோரிக்கை

By செய்திப்பிரிவு

பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக அனைத்து குடியிருப்பு வளாகங் களுக்குள் இரு கழிவு நீர் தொட்டிகள் அமைக்க, மாநக ராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக, ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 2 பகுதிகளாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றுக்கு மேற்கே உள்ள அனைத்து பகுதிகளுக்கும், திருநெல்வேலி , தச்சநல்லூர் மண்டலங்களுக்கு (வார்டு 1 முதல் 7 வரை, வார்டு எண் 38 (பகுதி) மற்றும் வார்டு 39 முதல் 55 வரை) பகுதி-2ல் சென்னை லார்சன் அன்ட் டூப்ரோ கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு கடந்த 26.07.2018-ம் தேதி முதல் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபோல், தாமிரபரணி ஆற்றுக்கு கிழக்கே உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாளை யங்கோட்டை, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் பகுதி (வார்டு 8 முதல் 37 வார்டு எண் 38 (பகுதி) ) பகுதி-3ல் கொல் கத்தா சிம்ப்ளக்ஸ் இன்ப்ரா ஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த 27.01.2019 முதல் பாதாள சாக்கடை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 641 கி.மீட்டருக்கு கழிவு நீர் குழாய்கள் பதித்தல் மற்றும் இணைப்புகள் ஏற்படுத்துதல், 54 கி.மீட்டருக்கு கழிவுநீர் உந்து குழாய்கள் பதித்தல், 3 கழிவு நீர் உந்து நிலையம் அமைத்தல், 29 கழிவு நீரேற்று நிலையங்கள் அமைத்தல், 25,586 பராமரிப்பு கழிவுநீர் குழிகள் ஏற்படுத்துதல், 98,252 குடியிருப்பு வளாகங்களுக்குள் சிறிய கழிவு நீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவைமூலம் சேகரிக்கப்படும் குடியிருப்பு கழிவுநீர் அனைத்தும் ராமையனபட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். இத்திட்டம் முழுமையடைந்தவுடன் தூய்மையான சுற்று சூழலை மக்களுக்கு தருவதே மாநகராட்சியின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் அனைத்து குடியிருப்பு வீடுகளும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் இணைக்கப்படும்.

இதற்காக இரு சிறிய கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளை அனைத்து குடியிருப்பு வளாகங்களிலும் அமைக்க வேண்டும். ஆனால், மக்களின் பொதுவான தயக்கத்தின் காரணமாக இந்த சிறிய கழிவு நீர் தொட்டியை மாநகராட்சியால் குடியிருப்பு வளாகங்களுக்குள் நிறுவ முடியவில்லை. எனவே, அனைத்து குடியிருப்புதாரர்களும் இந்த இரண்டு சிறிய கழிவு நீர் தொட்டியை குடியிருப்பு வளாகத்துக்குள் அமைக்க மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்