மோகனூர் அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயன்ற பிஹார் மாநில தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அணியாபுரம் பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன் தினம் இரவு, அவ்வழியாக ரோந்து சென்ற போலீஸார், ஏடிஎம் மையத்தை சோதனை செய்தனர்.
அங்கு இருந்த சந்தேகப்படும்படியான நபர் ஒருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை விசாரணைக்காக மோகனூர் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அவர் பிஹார் மாநிலம் கிழக்கு சாம்ரான் பகுதியைச் சேர்ந்த உபேந்தராராய் (28) என்பதும், பரளியில் உள்ள ஒரு தனியார் கோழித் தீவன ஆலையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை திருட முயன்றதாக அவர் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். அவரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.2.65 லட்சம் பணம் இருந்ததாகவும், ஏடிஎம் இயந்திரத்திற்கு காவலாளி நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago