இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை : ஆய்வுக்கு வந்த அகதிகள் மறுவாழ்வு இயக்குநரிடம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை, தேக்காட்டூர், அழியாநிலை ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அகதிகள் மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, இந்திய குடியரிமை வழங்க வேண்டும். குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, வீடு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என முகாம் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர், தோப்புக்கொல்லை அகதிகள் முகாமில் செய்தியாளர்களிடம் ஜெசிந்தா லாசரஸ் கூறியது: தமிழக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளும் இலங்கை அகதிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடியுரிமை வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இவர்களுக்கு கல்விக் கடன் வழங்க, வேலைவாய்ப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், கோட்டாட்சியர்கள் அபிநயா, சொர்ணராஜ், அகதிகள் நல தனி வட்டாட்சியர் சதீஸ் சரவணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிர்புறம் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், ஆட்சியர் ப. வெங்கடபிரியா முன்னிலையில், அகதிகள் மறுவாழ்வு நலத் துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அவரிடம், இந்திய நாட்டின் குடியுரிமை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை இலங்கை அகதிகள் வலியுறுத்தினர். ஆய்வின்போது, கோட்டாட்சியர் நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் சரவணன், நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்