கரோனா நெகட்டிவ், தடுப்பூசி சான்று இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : வாளையாறு சோதனைச்சாவடியில் அமைச்சர் ஆய்வு

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் அதிகரிப்பால், தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவையில் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா தொற்று பரவல் தற்போது தீவிரமாக உள்ளது. அங்கிருந்து கோவை மாவட்ட எல்லையான வாளையாறு, வேலந்தாவளம், மீனாட்சிபுரம், ஆனைகட்டி உள்ளிட்ட சோதனைச் சாவடிகள் வழியாக தினமும் ஏராளமானோர் கோவைக்கு வந்து செல்கின்றனர். எனவே, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடர்ந்து, கேரளாவில் இருந்து கோவைக்கு வந்து செல்பவர்கள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் கோவைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் அல்லது கரோனா பரிசோதனை அங்கேயே மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இந்த நடைமுறை நேற்று (ஆக.5) முதல் அமலுக்கு வந்தது.தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் வாளையாறு சோதனைச் சாவடிக்கு சென்று, வாகனங்களில் வருபவர்கள் கரோனா நெகட்டிவ் சான்று அல்லது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று, இ-பதிவு ஆவணம் போன்றவற்றை வைத்துள்ளனரா என ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியா ளர்களிடம் கூறும்போது, ‘‘கேரளாவில் கரோனா தொற்று அதிகரிப்பதாலும், கோவையில் 230 பேர்அளவுக்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததாலும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் ரயில் நிலையத்தில் சுகாதாரத்துறை யினர், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து நடந்து வருபவர்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனம், பேருந்தில் வருபவர்கள் என அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பொதுமக்கள், கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

ரயில் நிலையத்தில் ஆய்வு

கோவை ரயில் நிலையத்தின் வழியாக கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறையின் மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணியை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

மூணாறு சாலை

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு தொடர்பாக நேற்று முதல் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமலுக்கு வந்துள்ள நிலையில், கேரள - தமிழ்நாடு எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

அதன்படி, எல்லை வழியாக திருப்பூருக்குள் வரும் பயணிகள், 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனை சான்றில் கரோனா இல்லை என்றும், கரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணை செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, கேரளாவில் இருந்து மூணாறு சாலை வழியாக வாகனங்களில் வருபவர்களை மருத்துவக் குழுவினருடன் இணைந்து வனப் பணியாளர்கள் நேற்று சோதனை மேற்கொண்டனர். முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்