தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 15 நாட்கள் வேலை வழங்கக்கோரி புதுக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் அருகே எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சியில் 1,540 பேருக்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலை செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் வேலை வழங்குகிறது. எனினும், குறைந்த நாளே ஊராட்சி மூலம் வேலை வழங்கப்படுகிறது.
எனவே, மாதத்திற்கு 15 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தை அதே ஊராட்சியைச் சேர்ந்த காளிச்செட்டி மற்றும் புதூர் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாதத்திற்கு இரு தினங்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. மாதத்திற்கு 15 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர். இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று பெண்கள் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago