கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வேண்டுகோள் விடுத் துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா முதல் இரு அலைகளை பல்வேறு இழப்புகளுக்கிடையே எதிர்கொண்டு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், தற்போது 3-வது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், வணிகர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
அதன்படி, வணிகர்கள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசத்துடன் வந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கைகளை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வணிகர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமானது. இந்த விஷயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. தேவையில்லாமல் கடைகளுக்கு செல்வதையும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் கடைவீதிகளுக்கு அழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago