நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் - கண்காணிப்புக் குழுவில் முன்னோடி விவசாயிகளாக திமுக ஒன்றிய செயலாளர்கள் 2 பேர் நியமனம் : புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய கண்காணிப்புக் குழுவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் 2 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் 25 ஆயிரம் ஏக்கர் உட்பட 2 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு, கொள்முதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். வழக்கமாக இக்குழுவின் தலைவராக ஆட்சியர், ஒருங்கிணைப்பாளராக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்), உறுப்பினர்களாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் மற்றும் 2 முன்னோடி விவசாயிகள் இருப்பார்கள். இதில், உறுப்பினர்களாக நியமிக்கப்படும் 2 முன்னோடி விவசாயிகள் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படுவார்கள். அந்த வகையில், தற்போது இக்குழுவின் உறுப்பினர்களாக திமுக வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கந்தர்வக்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பரமசிவம், கறம்பக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய விவகாரங்களில் தலையிட்ட கந்தர்வக்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது இவரை கண்காணிப்புக் குழுவில் சேர்த்திருப்பது வியப்பை அளிக்கிறது.

மேலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு உட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஒன்றியங்களில்தான் அதிக நெல் விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து எவரும் சேர்க்கப்படாதது கண்டிக்கத்தக்கது. எனவே, தற்போது ஒருதலைப்பட்சமாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவை கலைத்துவிட்டு, புதிய குழு உருவாக்கப்பட வேண்டும். இதுகுறித்து கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள பரமசிவம், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் விவசாயிகள் தான். அந்த அடிப்படையில் தான் அவர்கள் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்