ராஜேந்திர சோழன் பிறந்த நாளையொட்டி - கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளையொட்டி, ஆடி திருவாதிரை நட்சத்திர தினமான நேற்று பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

ராஜேந்திர சோழன் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கங்கை முதல் கடாரம் வரை படையெடுத்து வென்று, கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்ததன் நினைவாக, அங்கு பிரகதீஸ்வரர் கோயிலை கட்டினார். இந்தக் கோயிலில் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் ஆன சிவலிங்கத்தை அமைத்தார். இந்தக் கோயிலை யுனெஸ்கோ உலக புராதன சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.

இந்நிலையில், ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான நேற்று, பிரகதீஸ்வரருக்கு திரவியப் பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர், பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக, கோயில் வளாகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த ராஜேந்திர சோழனின் படத்துக்கு முக்கியஸ்தர்கள் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிகளில், மத்திய தொல்லியல் துறை திருச்சி வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ், திருச்சி உதவி பொறியாளர் கலைச்செல்வன், தஞ்சை தொல்லியல் துறை பராமரிப்பு உதவியாளர் சங்கர், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் செயல் அலுவலர் சிலம்பரசன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் கோமகன், செயலாளர் மகாதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்