தாமிரபரணி- நம்பியாறு- கருமேனியாறு இணைப்பு திட்டத்தில் திருநெல்வேலி- கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் ரூ. 17.09 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணியை, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக் காலத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை ராதாபுரம், சாத்தான்குளம் உள்ளிட்ட வறட்சி யான பகுதிக்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த 2007-2008-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2 கட்டப்பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், இந்த கால்வாய் கடக்கும் திருநெல்வேலி- கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் ரூ. 17.09 கோடி மதிப்பில் பாலம் கட்டுப்பணி நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இதனை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டமான வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணிகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளன. திருநெல்வேலி- கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ரயில்வே பாலம் ஒன்றும் கட்டப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, கடலில் வீணாக கலக்கும் தாமிரபரணி தண்ணீர், இந்த ஆண்டு இறுதிக்குள் வெள்ளநீர் கால்வாய் வழியாக ராதாபுரம், சாத்தான்குளம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்படும். இதன்மூலம், 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பயன்பெறும்.
கடந்த 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆணை பிறப்பித்தபோது எந்தெந்த சர்வே வழியாக கால்வாய் செல்ல வேண்டும் என அனுமதி பிறப்பிக்கப்பட்டதோ, அதேபோன்று தான் கால்வாய் அமைக்கப்படுகிறது. எந்த மாற்றமும் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக பணி களைச் செய்யவில்லை. கிடப்பில் போட்டிருந்தது. யாருடைய ஆதாயத்துக்காகவும் இந்த அரசு வளைந்து கொடுக்காது.
கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணுஉலைகள் கட்டப்படுவதால் சிறப்பு நிதியாக ரூ.1,000 கோடி கேட்கப்பட்டுள்ளது. அதன்மூலம் ராதாபுரம் தொகுதியில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க ரூ. 700 கோடியும், கன்னியாகுமரி மாவட்டத் தில் பழையாறு மூலம் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை மணக்குடி அருகே மின்மோட்டார் மூலம் ஏற்றி, ராதாபுரம் கால்வாயில் 80 கன அடி தண்ணீர் கொண்டு வருவதற்கான ரூ. 300 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல் படுத்தவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது . ராதாபுரம் தாலுகாவில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சி மையத்தையும் கூடன்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அமைக்க, ஆட்சியர் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், அப்துல்வகாப், மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago