அரியலூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுவுக்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
குழந்தைகள் உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராகவும், குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். வயது வரம்பு 35 முதல் 65-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2-வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் 621 704’ எனும் முகவரியில் பெற்று, பூர்த்தி செய்து இதே முகவரிக்கு தபால் மூலம் அல்லது நேரில் ஆக.16-க்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago