திரையரங்குகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய திரையரங்கு தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு மார்ச் மாதம்திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. பல மாதங்களுக்குப்பின் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு ஏப்ரலில் மீண்டும்திரையரங்குகள் மூடப்பட்டுதற்போதுவரை திறக்கப்படவில்லை. தற்போது அனைத்து வியாபார தலங்களும் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடத்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சு. திருக்குமரன் தலைமையில் அருந்ததியர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், `பாளையங்கோட்டை பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 39, சி.என். கிராமம், பாபுஜி காலனி, வார்டு எண் 25, ராஜேந்திரநகர் பகுதிகளில் வாழும் அருந்ததியர் குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எம்பவர் இந்தியா சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் அளித்த மனு:
குறுக்குத்துறை தாமிரபரணி கரையில் ஆயிரம் ஆண்டு பழமையான கட்டிட கலையின் சான்றாக விளங்கும் பாலம் சிதிலமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 5 தூண்களுடன் 51 அடி நீளமுள்ள இந்த கல் பாலத்தை சீரமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ள நீர்வளம் காப்போம் திட்டத்தில் இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அருகே மானூர் ஒன்றியம் நாஞ்சான்குளம் பகுதியைச் சேர்ந்த மூ. பானுமதி, அவரது சகோதரிகள் கலையரசி, முகேஸ்வரி ஆகியோர் அளித்த மனுவில், தங்களது தந்தை மூக்கன் என்பவர் திடீரென்று இறந்துவிட்டதால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பை முடித்துள்ள தனக்கு அல்லது தனது தாயாருக்கு அரசுப்பணி மற்றும் முகேஸ்வரியின் உயர்கல்விக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago