தமிழ்நாடு நகர கூட்டுறவு வீட்டுவசதிசங்கங்களின் ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சேலம், நாமக்கல் மாவட்ட தலைவர் ஞானவேல் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சமத்துவபுரம் திட்ட பயனாளிகளுக்கு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் கடன் வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 1980-ம் ஆண்டு முதல் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள சங்கப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கி வரும் வீட்டு வசதி சங்கங்கள் தொடர்ந்து கடன் வழங்க தமிழக அரசு மூலம் ரூ.500 கோடி அளவிற்கு பொறுப்புறுதி வழங்க வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளாக சம்பளமின்றி பணிபுரியும் வீட்டுவசதி சங்க பணியாளர்களுக்கு நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். தள்ளுபடி திட்டங்களால் நலிவடைந்த சங்கங்களின் பணியாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க மாநில செயலாளர் முருகேசன் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் முருகேசன், முத்தமிழ்செல்வன் மற்றும் குமரலிங்கம், மந்திரகணேசன் உள்ளிட்ட 85 மத்தியக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago