டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய சட்டப்பேரவையில் வலியுறுத்த வேண்டும் : திருச்செங்கோடு எம்எல்ஏ-விடம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரனிடம், நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 18 ஆண்டுகளாக 26 ஆயிரத்து 500 பேர் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் பணிகளில் ஒப்பந்த அடிப்படையிலேயே வேலை செய்து வருகின்றனர். காலமுறை ஊதியமோ, பணி நிரந்தரமோ செய்யப்படவில்லை. கேரள மாநிலத்தில் மதுபானக் கடை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கி வருகின்றனர்.

அதேபோல் ஆந்திராவில் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரமும், ஊக்கத் தொகையும், ஆண்டிற்கு 40 சதவீதம் போனசும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மேற்பார்வையாளர்களுக்கு கடந்த 2010 வரை ரூ.12,750, விற்பனையாளருக்கு ரூ.10,100, உதவி விற்பனையாளருக்கு ரூ.8 ஆயிரமும் பகுதிநேர தற்காலிக ஒப்பந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டாஸ்மாக் பணியாளர்களை இத்துறையிலேயே பணி நிரந்தரம் செய்ய வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் குரல் எழுப்பி எங்களது கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்