கரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் :

By செய்திப்பிரிவு

கரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க தென்காசி மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு பதாகைகளை ஆட்சியர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டு, பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தென்காசி காய்கறிச் சந்தையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், “பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் ராஜா, சதன் திருமலைக்குமார், நலப்பணிகள் இணை இயக்குநர் வெங்கட்ரெங்கன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அருணா, திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒரு வார காலத்துக்கு கரோனா விழிப்புணர்வு குறித்து துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள் வாயிலாகவும், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும், கடை வீதிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு குறும்படப் போட்டி, ஓவியப் போட்டி, கரோனா விழிப்புணர்வு வாசகம் உருவாக்குதல், எப்எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சி, மீம்ஸ் உருவாக்குதல், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்