கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க 15 அமைப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என நாமக்கல் ஆட்சியர் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையை தலைமையிடமாகக் கொண்டு கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் ஆட்சி செய்து வந்தார். வில் வித்தையில் சிறந்து விளங்கிய ஓரி மன்னனுக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் 17, 18 ஆகிய இரு தினங்கள் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா ஆக., 2, 3-ம் தேதி நடக்கயிருந்தது.
எனினும், கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு விழா ரத்து செய்யப்பட்டது. அதேவேளையில் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:
கரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, ஆடி 18 அன்று (ஆக., 3-ம் தேதி) வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய 15 அமைப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதர விழாக்கள், ஊர்வலம் உள்ளிட்ட வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. கொல்லிமலையில் எந்த ஒரு அமைப்பும் பதாகைகள், கொடிகள், சுவரொட்டிகள் வைக்கவும் மற்றும் சுவர் விளம்பரம் செய்யவும் அனுமதி இல்லை.
ஒவ்வொரு அமைப்பிலும் 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வாகனங்களில் ஒலிபெருக்கி உபயோகிக்கக் கூடாது. திறந்த நிலை வாகனங்களில் வர அனுமதி இல்லை. கொடி, பதாகைகள் ஏந்தி வர, முழக்கங்கள் எழுப்ப அனுமதியில்லை. ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடித்துக்கொள்ள வேண்டும். காரவள்ளி மற்றும் முள்ளுக்குறிச்சி சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும்.
அரசு விதித்துள்ள நிபந்தனைகளை கடைபிடிக்கவில்லையென்றால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டப்பிரிவு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago