உப்பிலியபுரம் அருகே - சிறுத்தை தாக்கியதில் இளைஞர் உட்பட 2 பேர் காயம் :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த ஆங்கியம் கிராமத்தில் இருந்து கோனேரிப்பட்டி செல்லும் வழியில் உள்ள மலைக்கரடு பகுதிக்குள் இருந்து நேற்று காலை சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டுள்ளது. தகவலறிந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அங்குவந்து கரடுப் பகுதிக்குள் சிறுத்தை பதுங்கியுள்ளதா எனத் தேடியுள்ளனர்.

அதன்பின், நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் ஆங்கியம் கிராமத்தைச் சேர்ந்த மனோகர் மகன் ஹரிபாஸ்கர் (20), துரைசாமி (60) உள்ளிட்டோர் அந்த பகுதிக்கு மீண்டும் சென்று பாறைச் சந்துகளில் சிறுத்தை பதுங்கியுள்ளதா எனப் பார்த்துள்ளனர்.

அப்போது அங்கிருந்து திடீரென பாய்ந்த சிறுத்தை ஹரிபாஸ்கரின் மீது தாக்கியது. அதில் வலது இடது கை, முதுகு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட துரைசாமி, ஹரிபாஸ்கரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் அந்த சிறுத்தை தாக்கியது. இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. இவர்களின் சத்தம்கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடிவந்ததைக் கண்ட சிறுத்தை, அங்கிருந்து ஓடி கரடு பகுதிக்குள் பதுங்கிக் கொண்டது.

இதையடுத்து காயமடைந்த இருவரையும் மீட்டு தாத்தையங்கார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாவட்ட வன அலுவலர் சுஜாதா உத்தரவின்பேரில் அனைத்து வனச்சரகர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் உடனடியாக அங்கு சென்று பார்வையிட்டனர்.

கரடு பகுதியில் ஆங்காங்கே கேமராக்களைப் பொருத்தி கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கையாக இரவு 6 மணிக்கு மேல் ஆங்கியம், அழகாபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வௌியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விடிய விடிய அந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் சுஜாதாவிடம் கேட்டபோது, ‘‘இருவரையும் தாக்கியது சிறுத்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் இருப்பிடத்தைக் கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.

திருச்சி மாவட்டத்தில் சிறுத்தைகள் தாக்கி பொதுமக்கள் காயம் அடைவது இதுதான் முதல்முறை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்