திருச்சி அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கு புதிய கருவிகள் : மருத்துவமனை முதல்வர் வனிதா தகவல்

By செய்திப்பிரிவு

இதய சிகிச்சைக்காக புதிய கருவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது என திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இதய சிகிச்சை பிரிவில், நாளொன்றுக்கு 650 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இங்கு மாரடைப்பு நோயாளிக்கு உள் ஊடுருவி சிகிச்சை மற்றும் அடைப்புத் தன்மையைக் கண்டறிதல் என இருவகையான உயர்தர சிகிச்சைகள் அளிக்க தலா ரூ.1.35 கோடி மதிப்பிலான 2 கருவிகளை திருச்சி அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு அளித்துள்ளது.

இவற்றில், முதல் வகை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரையும், 2-வது சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வரையும் தனியார் மருத்துவமனைகளில் செலவாகும். இங்கு, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிசிச்சைகளை செய்துகொள்ளலாம். ஆக்சிஜன் குறைபாடு உள்ள இதய நோயாளிகளுக்கு இரட்டை சுவாசக் கருவி பொருத்தும் உபகரணத்தையும் அரசு வழங்கியுள்ளது.

கரோனா 3-வது அலை வந்தால் சமாளிக்க 2 ஆயிரம் படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் நலப் பிரிவில் அவசர சிகிச்சைக்கு 30 படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் 160 படுக்கைகள், 10 சாதாரண படுக்கைகள் தயாராக உள்ளன.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் பெறும் வகையில் மத்திய அரசு வழங்கியுள்ள புதிய கருவி ஆக.15-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. ஏற்கெனவே நிமிடத்துக்கு 330 லிட்டர் ஆக்சிஜன் அளிக்கும் மையம் செயல்பாட்டில் உள்ள நிலையில், நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் அளிக்கும் கருவிகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், வருங்காலத்தில் இங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்காது. மேலும், இங்கு உயிர் காக்கும் மருந்துகளும் போதிய அளவு இருப்பில் உள்ளன என்றார்.

பேட்டியின்போது, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ், துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்