திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அக்னி லிங்க நுழைவு வாயில் சுவற்றில் இருந்த கல்வெட்டை, திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு தலைவர் ராஜ், மீளாய்வு செய்ததில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு என தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “அக்னி லிங்க நுழைவு வாயில் சுவற்றில் 17 வரிகள் கொண்ட கல்வெட்டு பதிக்கப்பட்டு இருந்தது. அதனை மீளாய்வு செய்தலில், ‘வீரராமநல்லூர் என்னும் ஊரில் குடியேறும் தறிக்குடிகள், காசாக்குடி மக்கள், செட்டிகள் மற்றும் வாணியர்கள் மாதம் ஒன்றுக்கு ஒரு மாகாணி பணம் கோயிலுக்கும், ஒரு மாகாணி பணம் ஊர் சபைக்கும் வரியாக செலுத்த வேண்டும். இதனை, மாற்றம் செய்வோர் சிவத் துரோகம் மற்றும் ராஜ்யதுரோகம் செய்தவர்களாக கருதப்படுவார்கள் என குறிப் பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள சொற்கள் மூலமாக 2-ம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன் (1276-1292) கால கல்வெட்டு என அறிய முடிகிறது. மேலும், கல்வெட்டின் காலம் அவரது 12-வது ஆட்சி ஆண்டான கி.பி.1288-ம்ஆண்டாகும். சகோதரரான முதலாம் மாற வர்மன் குலசேகரனுடன் இணையாட்சி செய்தபோது, கரூரை தலைமையிடமாக கொண்டு கொங்கு பகுதியை ஆட்சி செய்துள்ளார். பழநி கோயிலுக்கு தனது பெயரில் ஏற்படுத்தப்பட்ட அவனிவேந்த ராமநல்லூரி என்ற ஊரை தானமாக வழங்கிய செய்தியை அறிய முடிகிறது. இதன்மூலம் கல்வெட்டின் குறிக்கப் படும் ஊரான வீரராமநல்லூர் என்பது, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள சங்கராமநல்லூர் பகுதி யாக இருக்கக்கூடும் என கருதப் படுகிறது.
அந்த காலத்தில் நெசவுத் தொழில் செய்பவர்களை தறிக்குடிகள் என்றும், வணிகம் செய்பவர்களை செட்டிகள் என்றும், செக்கில் எண்ணெய் ஆடும் தொழில் செய்பவர்களை வாணியர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
எனவே, கல்வெட்டில் குறிக்கப்படும் இவர்கள், இவ்வூரில் குடியேற வரிப்பணம் வசூல் செய்யப்பட்டுள் ளதை அறியலாம். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோயில்கள், 16-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப் பட்டது என கூறப்பட்டு வந்தது.
இந்த கூற்றை முறியடிக்கும் விதமாக, அக்னிலிங்க கோயில் சுவற்றில் 13-ம் நூற்றாண்டு கால பாண்டியர் கால கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. இதனால், கிரிவலப் பாதையில் உள்ள இதர கோயில்களை ஆய்வு செய்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago