சிதம்பரத்தில் மூடப்பட்ட தபால் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுமா?: மக்கள் எதிர்பார்ப்பு :

By செய்திப்பிரிவு

சிதம்பரத்தில் மூடப்பட்ட கச்சேரி மற்றும் கிழக்கு தபால் நிலையங்களை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சிதம்பரத்தில் தலைமை தபால்நிலையம் வடக்கு வீதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் படித்துறை அருகே உள்ள பகுதியில் கிழக்கு தபால் நிலையம், கச்சேரி தெருவில் கச்சேரி தபால் நிலையம் ஆகியவை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் இடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தன. அந்த 2 தபால் நிலையங்களுக்கும் கட்டிட கட்ட தபால்துறையால் அந்தந்த பகுதியில் இடம் வாங்கப்பட்டது. நிர்வாக காரணம் எனக்கூறி கடந்த சில வருடங்களுக்கு முன் 2 தபால் நிலையங்களும் மூடப்பட்டு வடக்கு வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் தலைமை தபால் நிலையத்தில் இயங்கி வந்த கிழக்கு தபால் நிலையம் மூடப்பட்டது. தற்போது கச்சேரி தபால் நிலையம் மட்டும் அங்கு இயங்கி வருகிறது. 2 தபால் நிலையங்களையும் அந்தந்த பகுதியில் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்காக தபால் துறையால் வாங்கிப்போடப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் மத்திய அமைச்சர் மற்றும் தபால் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை. 2 தபால் நிலையங்களும் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சிதம்பரம் நகர மக்கள் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்