மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சார்பில் கதர் கிராமத் தொழில்கள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் முதல் முறையாக கற்றாழை, வாழை மற்றும் பனை நார்களில் இருந்து உலகத்தரம் வாய்ந்த கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி மையம் களக்காட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கற்றாழை, பனைமரங்கள் அதிக அளவில் உள்ளன. களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக நடைபெறுகிறது. கற்றாழை செடிகள் மற்றும் பனை ஓலைகளில் இருந்து நார்களை பிரித்தெடுத்து பலவிதமான பெட்டிகள், கூடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் இப்பகுதி பெண்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுபோல் வாழை மட்டைகளில் இருந்து நார்களைப் பிரித்தெடுத்து வீட்டு அலங்காரப் பொருட்கள் செய்யும் தொழிலும் நடைபெறுகிறது.
ரூ.1 கோடியில் பயிற்சி மையம்
குடிசை தொழிலாக நடைபெற்று வந்த கைவினை கலைஞர்களின் தயாரிப்புகளை அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் உலகத்தரம் வாய்ந்த தரத்துடன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நோக்கத்தில் தமிழகத்தில் முதல்முறையாக களக்காட்டில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதி உதவியுடன் தொழில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
இங்கு அதிநவீன உபகரணங்களுடன் முதல் கட்டமாக 175 கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக பயிற்சி கொடுப்பவர்கள் பல மாநிலங்களில் இருந்து சுழற்சி முறையில் வரவழைக்கப்பட உள்ளனர்.
இதன்மூலம் இங்கு சர்வதேச தரத்துடன் பொருட்களை உற்பத்தி செய்து, ஆய்வுக்கு உட்படுத்தி சர்வதேச தரச் சான்றிதழ் பெற்று வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, பத்தமடை பாய், அம்பாசமுத்திரம் செப்பு பொருட்கள், காருகுறிச்சி மண்பாண்ட பொருட்கள் செய்யும் கைவினைஞர்களுக்கும் இதுபோல் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றார். கதர் மற்றும் கிராமத் தொழில் கள் ஆணையத்தின் தெற்கு மண்டல உறுப்பினர் சேகர் ராவ் பெரேலா, கோட்ட இயக்குநர் ஆர்.பி.அசோகன், உதவி இயக்குநர் கள் டி.வி.அன்புச்செழியன், எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago