நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும்-கரூர் மாவட்டம் நெரூருக்கும் இடையே காவிரியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என தமிழக விவசாய முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
அந்நிறுவனத் தலைவர் செல்ல. ராசாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் திருச்சி நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளரிடம் மனு அளித்தனர். அம்மனு விவரம்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள ஒருவந்தூருக்கும், கரூர் மாவட்டம் நெரூருக்கும் இடையே காவிரி ஆறு பாய்ந்து செல்கிறது. இப்பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டுமென இரு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் கோரிக்கை விடுத்துவந்தனர். இதன்பலனாக கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தின் ஆய்வுப் பணிக்காக சர்வே பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் சர்வே பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து முடித்து தடுப்பணை கட்டுமானப் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜா, பொய்யேரி, கொமராபாளையம் மற்றும் மோகனூர் பாசன வாய்க்கால்களை சீரமைக்க ஏற்கெனவே ரூ.184 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. எனினும், பல இடங்களில் பணிகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago