இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐஐடி) திருச்சி வளாகத்தில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அதன் இயக்குநர் என்.வி.எஸ்.என்.சர்மா தெரிவித்தார்.
இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் திருச்சி வளாகத்துக்கு, ரூ.128 கோடியில் திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டி கிராமத்தில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கல்வி நிலையத்தின் 3-வது பட்டமளிப்பு விழா ஜூலை 31-ம் தேதி இணையவழியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, புதிய வளாகத்தில் இயக்குநர் சர்மா, நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் திருச்சி வளாகத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவில் கணினி அறிவியல் பொறியியல் மற்றும் மின்னணு- தகவல் தொடர்பு பொறியியல் ஆகிய துறைகள் உள்ளன. மேலும், பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.
ஜூலை 31-ம் தேதி இணையவழியில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் 46 பேர் பட்டம் பெறவுள்ளனர். இதில், கணினி அறிவியல் பொறியியல் துறை மாணவர் திலகர் ராஜா, மின்னணு- தகவல் தொடர்பு பொறியியல் துறை மாணவர் கந்ரெகுல லலித் பனி சீனிவாஸ் ஆகிய இருவரும் தங்கப் பதக்கம் பெறுகின்றனர். திலகர் ராஜா, குடியரசுத் தலைவர் தங்கப் பதக்கத்தையும் பெறவுள்ளார்.
பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், கல்லூரியின் ஆளுநர் குழுவின் தலைவருமான வி.இறையன்பு தலைமை வகிக்கிறார். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
கல்லூரியில் இணையவழியில் சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புகளை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக கணினி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளைத் தொடங்க திட்டமிட்டு வருகிறோம்.
கல்லூரியில் தற்போது 2 இளநிலைப் பாடப் பிரிவுகளில் தலா 30 ஆக உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை தலா 60 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அப்போது, பதிவாளர் ஜி.சீதா ராமன், துணைப் பதிவாளர் பிஜூ மேத்யூ, பட்டமளிப்பு விழா ஒருங்கிணைப்பாளர் வி.சிந்து ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago