நாமக்கல் ரிங்ரோடு திட்டம் அறிவித்து 9 ஆண்டுகளாகியும் - நிலம் கையகப்படுத்தும் பணி முடியாததால் மக்கள் அதிருப்தி :

By செய்திப்பிரிவு

நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ரிங் ரோடு திட்டத்துக்கு இதுவரை நிலம் கையகப்படுத்தும் பணியே முடியாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்துக்குள் நாள்தோறும் 700-க்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்துகள் மற்றும் பல்வேறு சரக்கு வாகனங்களால் நாமக்கல் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகளும் அதிகரித்து வருகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் புறநகர் வழியாக செல்லும் வகையில் ரிங் ரோடு அமைக்க வேண்டும் என, நாமக்கல் நகர மக்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன்பலனாக கடந்த 2012-ம் ஆண்டு ரிங் ரோடு அமைக்க அரசு அனுமதியளித்தது.

தொடர்ந்து ரிங் ரோடு அமைப்பதற்கான இடமும் உடனடியாக தேர்வு செய்யப்பட்டது. இதன்படி முதலைப்பட்டி அருகே தொடங்கும் ரிங் ரோடு மரூர்பட்டி, விட்டம நாயக்கன்பட்டி, வீசாணம், வேட்டாம்பாடி, சிவியாம்பாளையம், கூலிப்பட்டி, வேப்பனம், வசந்தபுரம், கணவாய்பட்டி, தண்ணீர் பந்தல், தொட்டிப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக 22 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக வருவாய் துறையில் நாமக்கல் புறவழிச் சாலை நில எடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு வட்டாட்சியர் தலைமையில் அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டனர். மேலும், கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீடு வழங்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்நிலையில் திட்டம் அறிவித்து 9 ஆண்டுகளான போதும் நில அளவீடு செய்யும் பணியே முழுமை பெறாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நிலஎடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் ரிங் ரோடு திட்டம் முதலைப்பட்டி தொடங்கி 11 கிராமங்கள் வழியாகச் செல்கிறது. இதற்காக 66 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மரூர்பட்டி, வீசாணம் ஆகிய இரு கிராமங்களில் கையப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.3 கோடியே 47 லட்சத்து 28 ஆயிரத்து 970 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைந்து இப்பணிகள் முடிக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்