ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்படி டோக்கன் வழங்கி, கரோனா தடுப்பூசி போடும் முறையில், பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதால், இம்முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று டோக்கன் வழங்கி, கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட அளவில் நேற்று 9050 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வரிசை எண்களின் படி ஒவ்வொரு மையத்திற்கும் தடுப்பூசி போட, டோக்கன் கொடுக்கப்படும் என கூறுகின்றனர்.
ஆனால், இப்பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் பலர் வீடு, வீடாகச் செல்வதில்லை. மாறாக, வாக்காளர் பட்டியல்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோக்கனை, மொத்தமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் வரிசைப்படி கொடுக்காமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால், டோக்கன் வரும் என முறைப்படி காத்திருப்போர் ஏமாந்து போகும் நிலை ஏற்படுகிறது, என்றனர்.
இதுகுறித்து டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் வரிசைப்படி, டோக்கன் வழங்கச் செல்லும்போது, சிலர் நாங்கள் அடுத்த முறை தடுப்பூசி போட்டுக் கொள்வதாகக் கூறுகின்றனர். சிலர் கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே போட விரும்புவதாகக் கூறுகின்றனர். வார நாட்களாக இருப்பதால், பலர் வேலைக்கு சென்று விடுவதால், வீடு பூட்டி இருக்கிறது. இந்த நிலையில் வரிசைப்படி, சரியாக டோக்கன் கொடுப்பது சாத்தியமில்லை. இதனால் அப்பகுதி பிரமுகர் களிடம் டோக்கனைக் கொடுத்து, குறிப்பிட்ட பூத்திற்கு உட்பட்டவர்களுக்கு கொடுக்குமாறு கூறி விடுகிறோம், என்றனர்.
மாற்றுத் திட்டம்
திருப்பூர் மாவட்டத்திலும் இதுபோல் திட்டம் செயல்படுத்தப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது. அதன்படி, வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி போடும் நாள், எந்தெந்த பகுதி வாக்காளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என ஒரு நாள் முன்பாகவே அறிவிப்பு செய்யப்படுகிறது.அதன்படி ஊசி போட வரும்போது, ஆதார் எண் பதிவு செய்வதோடு, வாக்காளர் பட்டியல் படி அவரது அடையாள அட்டையும் சரிபார்க்கப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்ட நிர்வாகமும் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago