அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை உருவாகுமா என்ற கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பதில் அளித்துள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. அதில் தேர்தல் வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை. எங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்போம்.
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரை ஒன்று சேர்க்க பாஜக முயற்சி மேற்கொள்வதாக வரும் யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் கூற முடியாது. அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் சசிகலா மற்றும் எனது முயற்சியும் ஆகும்.
மீண்டும் அரசியலுக்கு வருவதாக கட்சியினரிடம் சசிகலா கூறி வருவது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
உப்பு தின்றவர்கள் யாராக இருந்தாலும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். எனவே, லஞ்ச ஒழிப்பு போலீஸார் சட்டப்படி எந்த நடவடிக்கை எடுத்தாலும் சரிதான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக எதையெல்லாம் எதிர்த்துப் போராடியதோ, அவையெல்லாம் திருப்பி வருகின்றன.
ஆட்சிக்கு வந்தவுடன் தாங்கள் எதிர்த்ததை எல்லாம் மறந்துவிட்டனர். எனவே, திமுக ஆட்சியில் மகிழ்ச்சியைவிட சிரிப்பாக உள்ளது என்றார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு வரத் தொடங்கியுள்ள நிலையில், அந்த ஒற்றைத் தலைமை சசிகலாவா? ஓ.பன்னீர்செல்வமா? பழனிசாமியா என்ற கேள்விக்கு, ‘‘யூகத்துக்கு பதில் அளிக்க முடியாது. ஆனால், அதிமுக தொடங்கியது முதல் ஜெயலலிதா மறைவு வரை ஒற்றை தலைமைதான் இருந்தது. தற்போது நிலைமை மாறியுள்ளது. மீண்டும் எல்லாம் சரியாகும்’’ என்றார்.
அப்போது, கட்சி நிர்வாகிகள் ஆர்.மனோகரன், எம்.ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago