திருச்சியில் காரில் தொங்கியபடி 2 கி.மீ தூரம் விரட்டிச் சென்றபோது காயமடைந்த தனிப்படை காவலருக்கு டிஜிபி சைலேந்திரபாபு சன்மானம் வழங்கி பாராட்டினார்.
திருச்சியில் நேற்று முன்தினம் காரில் கஞ்சா கடத்திச் சென்ற முகமது அனீபா என்பவரை தனிப்படை போலீஸார் மறித்து பிடிக்க முயற்சித்தனர். அப்போது முகமது அனீபா தனிப்படை காவலர் சரவணன் மீது காரை ஏற்றிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார்.
ஆனால் காவலர் சரவணன் அந்த காரின் முன்பகுதியிலுள்ள பேனட்டை பிடித்துக் கொண்டு சுமார் 2 கி.மீ தொங்கியபடியே சென்றார். சஞ்சீவி நகர் சந்திப்பு பகுதியில் டிராபிக் ஜாம் காரணமாக காரின் வேகம் குறைந்ததால், பின்னால் வந்து கொண்டிருந்த சக தனிப்படை காவலர்கள் அந்த காரை மறித்து சரவணனை மீட்டனர். மேலும் முகமது அனீபாவை கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, நீண்ட தூரம் காரில் தொங்கியபடி வந்ததால் தலைமைக் காவலர் சரவணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
எனவே அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனிப்படை காவலர் சரவணனிடம் நலம் விசாரித்தார்.
அப்போது மெச்சத்தக்க பணியைப் பாராட்டி ரூ.25,000 சன்மானம் அறிவித்துள்ளதாகக் கூறிய அவர், மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை காவல்துறையே மேற்கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago