கடையநல்லூரில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் :

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் சுமார் 100 பேர் பணியாற்றுகின்றனர்.

17 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் 84 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த பணியாளர்கள் நேற்று கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “நாள் ஒன்றுக்கு ஊதியம் ரூ.385, பஞ்சப்படி ரூ.37 சேர்த்து மொத்தம் ரூ.422 வழங்க வேண்டும். ஆனால், 315 ரூபாய் மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால் நகராட்சி அதிகாரிகளிடமும், நகராட்சி அதிகாரிகளிடம் கேட் டால் ஒப்பந்ததாரரிடமும் கேட்கச் சொல்கிறார்கள்.

முறையாக கூலி வழங்க வேண்டும். வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். வருங்கால வைப்புநிதி, இஎஸ்ஐ ஆகியவற்றுக்கு பிடித்தம் செய்த தொகைக்கு முறையாக கணக்கு கூற வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.

இதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், புளியங்குடி காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE