கோவில்பட்டி- கடம்பூர் இடையே ரயில்களை வேகமாக இயக்க ரூ.21.74 கோடியில் ரயில் பாதை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவில்பட்டி - கடம்பூர் ரயில் நிலையங்களுக்கிடையே 11.50 கி.மீ. தூரம் உள்ள ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு தற்போதுள்ள பழமையான ஒரு வழி ரயில் பாதை 1993-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த பகுதி கரிசல் மண் பகுதி என்பதால், இங்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதை யால் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களை இயக்க ஈடு கொடுக்க முடியவில்லை. மேலும், கோடை மற்றும் குளிர் காலங்களில் தண்டவாளங்களில் விரிசல் ஏற்படுதல் உள்ளிட்டவற்றால் ரயில் பாதையை பராமரிப்பதில் பல இடர்பாடுகள் இருந்து வந்தன.
மதுரை - வாஞ்சி மணியாச்சி பிரிவில் ரயில்கள் 100 கி. மீ வேகத்தில் இயக்கப்பட்டாலும், இந்தப் பகுதியில் தொய்வான கரிசல் மண் காரணமாக 70 கி.மீ வேகத்தில் மட்டுமே ரயில்களை இயக்க முடிந்தது. ஸ்லிப்பர் கனத்தை அதிகரிப்பது, நவீன கருவிகள் பொருத்துவது, ரயில் பாதையில் கொட்டப்பட்டுள்ள சரளைக் கற்களை சலித்து நிர்மாணிப்பது, ரயில் பாதை ஓரங்களில் மழை நீர் வடிகால் அமைப்பது போன்ற தற்காலிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் கரிசல் மண் தொய்வை சரி செய்ய முடியவில்லை.
தற்போது அந்த பகுதியில் 12 கி.மீ. தூரத்துக்கு ஒரு மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு அதில் செம்மண் நிரப்பப்பட்டு நிலம் பலப்படுத்தப்படுகிறது. பலப்படுத்தப்பட்ட நிலத்தின் மேல் நவீன புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்காக ரூ.21.74 கோடி செலவிடப்படுகிறது. பணிகள் முடிந்தவுடன் இந்தப் பகுதியிலும் 100 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago