இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான உடல் தகுதி மற்றும் திறனறித் தேர்வு, கோவை பி.ஆர்.எஸ். வளாகத்திலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற எழுத்து தேர்வில் தேர்ச்சிய டைந்தவர்கள், அடுத்தகட்டமாக உடல் தகுதி மற்றும் திறனறித் தேர்வில் பங்கேற்க, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங் களைச் சேர்ந்த 3,263 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. காலை 7 மணி மற்றும் 10 மணி என இரண்டு பிரிவாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிகழ்வுக்கு கோவை சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடல் தகுதி மற்றும் திறனறித் தேர்வுக்கு வந்தவர்களின் கரோனா நெகட்டிவ் சான்று முதலில் சரிபார்க்கப்பட்டு, அதன் பின்னர், உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
டிஐஜி முத்துசாமி கூறும்போது, ‘‘நான்கு மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 3,263 பேர் உடல் தகுதி மற்றும் திறனறித் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இத்தேர்வு வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. தினமும் முதல் பிரிவில் 300 பேரும், இரண்டாவது பிரிவில் 200 பேரும் கலந்து கொள்கின்றனர்.
இம்முகாம் நடக்கும் பகுதியில் 300 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களுக்கு அடுத்த திங்கள்கிழமை தேர்வு நடத்தப் படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago