கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கம் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நேற்று ஒரே நாளில் 15 காசுகள் குறைந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூரா சுண்டு பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 300-க்கும் அதிகமான கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அம்மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் பறவைக் காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்தது தெரியவந்தது.
இதனிடையே கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கத்தால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் பகுதியில் உள்ள பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கோழிப் பண்ணைகளுக்குள் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் மீது கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதுபோல் கோழிப்பண்ணைகளிலும் மற்றும் பணியாளர்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
இதனிடையே நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் 515 காசுகளாக இருந்த முட்டை விலை 15 காசுகள் குறைத்து 500 காசுகளாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. கேரள மாநில பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக முட்டை விலை குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டதாக பண்ணை யாளர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago