திருச்சி மாநகரில் சேதமடைந்த புதை சாக்கடை குழாய்களைச் சீரமைக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் அண்ணா நகர் உழவர் சந்தை அருகே இந்தப் பணிகளை மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசியது:
திருச்சி நகராட்சியாக இருந்தபோது 1987-ல் தொடங்கப்பட்ட புதை சாக்கடை திட்டத்தில் அமைக்கப்பட்ட குழாய்களில் அடிக்கடி அடைப்பு மற்றும் கசிவு ஏற்படுவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, 9-13, 16-19, 22, 24, 47- 50, 55, 56, 58 ஆகிய 18 வார்டுகளில் முழுமையாகவும், 8, 14, 15, 20, 21, 23, 25, 26, 27, 44, 51, 52, 54, 57, 59, 60 ஆகிய 16 வார்டுகளில் பகுதியாகவும் என 34 வார்டுகளில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள புதை சாக்கடை குழாய்களை ரூ.201 கோடியில் மறுசீரமைக்கும் வகையில் 3 தொகுப்பு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புதை சாக்கடைத் திட்டத்தில் உள்ள பழுதுகள் சீரமைக்கப்படும். மேலும், விடுபட்ட 11 வார்டுகளில் புதை சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்தி, 65 வார்டுகளிலும் புதை சாக்கடைத் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
“இந்தத் திட்டத்தில் 55,155 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது.
7 இடங்களில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்படும். இந்தத் திட்டம் 2023 மே மாதம் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், ரங்கம் எம்எல்ஏ எம்.பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், நகரப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் குமரேசன், சிவபாதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago