திருநெல்வேலி அருகே மொபட் மீது பைக் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே நாரைக்கிணறை அடுத்துள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (60). முன்னாள் ராணுவ வீரரான இவர் தாழையூத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவில் பணி முடிந்து இவர், சொந்த ஊருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பழக்கமான காசிமணி (36), அவரது மனைவி ஜெயலட்சுமி (23), அவர்களது மகன் கேசவன் (6) ஆகியோர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் கீழக்கோட்டைக்கு செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்ததை பார்த்தார். அவர்கள் மூவரையும் கீழக்கோட்டையில் கொண்டு விடுவதாக கூறி தனது மொபட்டில் ஏற்றிக் கொண்டு பயணத்தை தொடர்ந்தார்.
அப்போது, எதிரே கங்கை கொண்டானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கடையநல்லூர் அருகே புன்னையாபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் (25), சாத்தூரை சேர்ந்த விக்னேஷ்குமார் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். கங்கைகொண்டான் 4 வழிச்சாலைவிலக்கு அருகே வந்தபோது மொபட்டும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின.
இதில் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பற்றியது. முத்துக்குமாரின் உடலில் தீ பரவியது. தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த கணேசன், காசிமணி மற்றும் முத்துக்குமார் ஆகியமூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜெயலட்சுமி, கேசவன், விக்னேஷ்குமார் ஆகியோர் திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கங்கைகொண்டான் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago