அடவிநயினார் அணை நிரம்பியது :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரையில் உள்ள 132.22 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நிரம்பியது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மழையின் தீவிரம் குறைந்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் கடனாநதி அணையில் 10 மி.மீ., அடவிநயினார் அணையில் 5, ஆய்க்குடியில் 4, குண்டாறு அணையில் 2, சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை நீர்மட்டம் மூன்றரை அடி உயர்ந்து 74 அடியாக இருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் அரையடி உயர்ந்து 71.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 68.96 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்தில் மட்டும் 1 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,033 கனஅடி நீர் வந்தது. 1,398 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 110.95 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 119.16 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 716 கனஅடி நீர் வந்தது. 150 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 173.60 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 16.65 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 11.77 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 29.25 அடியாகவும் இருந்தது.

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அருவிகளில் குளிக்க தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் குற்றாலத்துக்கு சென்று அருவியை பார்த்து ரசித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்