விழுப்புரம் அருகே முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நீண்ட காலமாக தேங்கியிருந்த சுமார் 150 டன் மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி, ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் தொடங்கியிருக்கிறது.
விழுப்புரம் அருகே முண்டி யம்பாக்கத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் ஊருக்கு அப்பால் கொட்டாமல் மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.
நோயாளிகள் சிகிச்சை பெறக்கூடிய மருத்துவப் பிரிவுகளுக்கு பின்புறமே மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டி, அதனை தீ வைத்து எரிப்பதால் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் போது வெளியேறும் நச்சுப் புகை மற்றும் துர்நாற்றத்தினால் மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக வந்து செல்வோரும் அவதியடைகின்றனர்.
எரிந்தும் எரியாமலும் மலை போல் குவிந்திருக்கும் இந்த மருத்துவக் கழிவுகளை அகற்றாமல் இருப்பதாக சில வாரங்களுக்கு முன் ஆட்சியர் மோகனுக்கு புகார் சென்றது. இதையடுத்து, ஆட்சியர் மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, திறந்த வெளியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்க வேண்டும்; உடனடியாக கழிவுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, அப்பகுதியில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த சுமார் 150 டன் மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி தொடங்கியது. இந்நிலையில் நேற்று மீண்டும் அங்கு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அப்பகுதியில் மரக்கன்றுகளை நடவும் உத்தரவிட்டார். தொடர்ந்து மருத்துவமனை புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், புற நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago