பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தில், மின்வாரிய உதவி செயற்பொறியாளராக பணியாற்றியவர் மாணிக்கம்(43).
இவர், கடந்த 2019-ம் ஆண்டு டிச.26-ம் தேதி துறைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம், வீட்டருகே தாழ்வாகச் சென்ற மின்கம்பியை மாற்றி அமைத்துத் தருவதற்கு லஞ்சம் வாங்கியபோது, பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு காரணமாக, மாணிக்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, மாணிக்கம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 13.1.2021 அன்று பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மாணிக்கத்துக்கு சொந்தமான வெங்கடேசபுரத்தில் உள்ள வீட்டில் அரியலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலும், வெண்பாவூர் கிராமத்தில் உள்ள மாணிக்கத்தின் தாயார் லட்சுமி வீட்டில் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப் பற்றியதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago