தொடர்ச்சியாக கழிவுகள் கலப்பதால் வாலாங் குளத்தின் நீர் மிகவும் மாசடைந்து கரும்பச்சை நிறத்துக்கு மாறியுள்ளது. குளத்தில் கழிவுகள் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாநகரில் உள்ள 8 குளங்களும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குளக் கரைகளில் பொதுமக்கள் பொழுதை கழிக்கும் வகையிலும், ஓய்வு எடுக்கும் வகையிலும் நடைபாதை, உடற்பயிற்சி கட்டமைப்புகள், அலங்கார வளைவுகள், தண்ணீரில் மிதக்கும் நடைபாதை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உக்கடம் பெரிய குளத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விட்டன. பிற குளங்களில் பணிகள் நடைபெறவுள்ளன. தற்போது வாலாங் குளத்தின் மற்றொரு பகுதியில், மிதக்கும் நடைபாதை, குழந்தைகளுக்கான விளையாட்டு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
குளக் கரைகள் கோடிகளில் பணத்தை செலவு செய்து அழகுபடுத்தப்பட்டாலும், குளத்து நீரில் கழிவுகள் கலக்கப்படுவதும், நீர் மாசடைவதும் தொடர்ந்து நடைபெறுவதாக புகார்கள் உள்ளன. ஆகாய தாமரை படர்வு பிரச்சினை இன்னும் தொடர்கிறது.
வாலாங் குளத்தில் கடந்த மாதம் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதற்கு கழிவு நீர் கலப்பதும், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதும், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன், இறைச்சிக் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்படுவதும் முக்கிய காரணமாக இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதோடு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள், தொழில் நிறுவனங்கள், அலுவலக கட்டிடங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளும் இரவு நேரங்களில் வாலாங் குளத்தில் கலந்து விடப்படுகின்றன. தொடர்ச்சியாக கழிவுகள் கலக்கும் சூழலால் குளத்தின் நீர் துர்நாற்றத்துடன் தற்போது அடர் கரும்பச்சை நிறத்துக்கு மாறியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களை அழகுபடுத்துவதை விட, குளத்தில் கழிவுகள் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கருத்து இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “குளத்தில் கழிவுநீரின் அடர்த்தி மிகவும் அதிகமாகும்போது கரும்பச்சை நிறத்துக்கு மாறி விடும். வாலாங் குளத்தில் பிரதான நீராதாரம் நொய்யலாறு. காட்டூர், வடகோவை பகுதிகளில் இருந்து மழைக்காலங்களில் வரும் நீரால், நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, வாலாங்குளத்துக்கு அதிகளவில் தண்ணீர் வரத்து ஏற்படும். இதனால் துர்நாற்றம் மிக்க கழிவுகள் அடித்து செல்லப்படும். நொய்யலில் இன்னும் தண்ணீர் வராததால் குளம் மாசடைந்து காணப்படுகிறது. குளத்தில் கழிவுகள் கலப்பதை தடுக்க மாநகராட்சி முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்களை திட்டமிட்டு அமைக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago