சிவகங்கை அருகே டீசல் விலை உயர்வால் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சாமல் விட்டதால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
சிவகங்கை அருகே அல்லூர் பனங்காடியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 350 ஏக்கருக்கு மேல் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர். அவர்களில் பலர், 16 ஆண்டுகளுக்கு முன்பு இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்தும், இதுவரை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் டீசல் இன்ஜின் மோட்டார்களை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் டீசல் விலை ரூ.95-யை தாண்டியதால், விவசாயிகளால் டீசல் வாங்க முடியவில்லை. இதனால் தண்ணீர் பாய்ச்சாமல் அப்படியே விட்டுவிட்டதால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி கருப்பையா கூறியதாவது: ஒரு லிட்டர் டீசல் ஊற்றினால் முக்கால் மணி நேரம்தான் மோட்டார் ஓடும். ஒரு ஏக்கருக்கு குறைந்தது 10 மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நெற்பயிருக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்ச வேண்டும். இதனால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சவே ரூ.1,200 தேவைப்படுகிறது. அதனால் தண்ணீர் பாய்ச்சாமல் விட்டுவிட்டோம்.
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், உடனடியாக இலவச மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago