வளர் இளம்பெண்களுக்கு - ரத்தசோகையை தடுக்க இயற்கை நலப்பெட்டகம் வழங்கல் :

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 10 வயது முதல் 19 வயது வரையான இளம் பெண்களுக்கு ரத்த சோகையைத் தடுக்க இயற்கை நலப் பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை திருச்செங்கோடு பகுதி மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து யோகா மற்றும் இயற்கை மருத்துவர் வெங்கடேசன் கூறியதாவது:

இயற்கை நலப்பெட்டகத்தில் இரும்பு சத்து நிறைந்த கறிவேப்பிலை பொடி, முருங்கை இலை பொடி, நெல்லிக்காய் பொடி மற்றும் தேன் ஆகிய நான்கு பொருட்கள் உள்ளன. இவற்றை நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளை உணவுக்கு பின்னர் ஐந்து கிராம் அளவில் பால் அல்லது தேன், தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் 10 முதல் 19 வயதுள்ள வளர் இளம் பெண்களுக்கு வரும் ரத்தசோகையை தடுத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வட்டார மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் செயல்படுத்தப்படுகிறது. அங்கு இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE