‘வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’ :

By செய்திப்பிரிவு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் வழங்கப்படுகிறது.

இதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் மற்ற வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.

உதவித்தொகை பெறுவோர் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வர வேண்டும். தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுபோல், ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். 45 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும், ஆண்டு குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதுள்ளிட்ட தகுதிகளையுடையோர் இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ, இணையதளம் (https://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in) வாயிலாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வழங்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்