ஆரணி அருகே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை எனக் கூறி, சென்னை – ஆரணி சாலையில் நேற்று கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, “இரும்பேடு ஊராட்சியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. சாலைகளும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்காமல் உள்ளதால், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. மேலும், மழை பெய்து வருவதால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம்போல் தேங்கிக் கிடக்கிறது.
இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் தரணி வெங்கட்ராமன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு அடிப்படை வசதி களை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி கிராமிய காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உங்களது கோரிக்கைக்கு தீர்வு காண, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago