மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த வியாபரமும் சரிந்தது : வணிக வீதிகளை காலி செய்யும் நிறுவனங்கள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கரோனா ஊரடங்கு தளர்வு அறிவிப்பை அடுத்து கடைகளை திறந்துள்ள நிலையில், எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறாததால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கணிசமான நிறுவனங்கள் நகரின் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால், கோயிலைச் சுற்றியுள்ள ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள், டவுன் ஹால் ரோடு, நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகள் பல கோடி ரூபாய் புழங்கும் வர்த்தகப் பகுதியாக உள்ளன. இதனால் இப்பகுதியில் கடை வாடகைக்கு கிடைப்பதே மிகவும் அரிது என்ற நிலை இருந்து வந்தது.

ஆனால் கரோனாவுக்கு பின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஊரடங்கால் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டபோது போதிய வருவாயின்றி அனைத்து வியாபாரமும் பாதிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிப்புக்குப் பின் கடைகள் திறக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் வருகை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் கடைக்கு வாடகை செலுத்த முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமலும் பல வியாபாரிகள் திணறி வருகின்றனர்.

இதனால் சில நிறுவனங்கள் கடையை காலி செய்துவிட்டு நகரின் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. அது தொடர்பான அறிவிப்புகளை ஆங்காங்கே காண முடிகிறது. அதேபோல், தற்போது பல இடங்களில் ‘கடை வாடகைக்கு’ என்ற அறிவிப்பு பலகையையும் காண முடிகிறது.

இதுகுறித்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறுகையில், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிற கூட்டத்தை வைத்துதான் மாசி வீதி, வெளி வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் நடக்கும். தற்போது இந்த வீதிகளில் வாகனங்களை பார்க்கிங் செய்ய முடியவில்லை. கோயிலுக்கு வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இங்குள்ள மொத்த வியாபார நிறுவனங்களுக்கு சரக்குகளை கொண்டு வரும் கனரக வாகனங்கள், லாரிகளுக்கு போலீஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதோடு சேர்ந்து கரோனா ஊரடங்கால் ஒட்டுமொத்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் இப்பகுதியில் தொடர்ந்து செயல்பட முடியாத நிறுவனங்கள், வாடகை குறைவாக உள்ள பைபாஸ் ரோடு உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்