இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டை, சமையல் மஞ்சள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 4 பேரை மெரைன் போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பெரியகடை தெருவில் உள்ள அப்துல் என்பவரது வீட்டில் நேற்று ராமேசுவரம் மெரைன் போலீஸ் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் கணேசமூர்த்தி, அய்யனார் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் இளையராஜா உள்ளிட்ட போலீஸார் சோதனையிட்டனர். அப்போது வீட்டுக்குள் அரசால் தடை செய்யப்பட்ட பதப்படுத்தாத கடல் அட்டை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ எடையுள்ள கடல் அட்டையை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அப்துல் தப்பி ஓடிவிட்டதாகவும், இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்த வைத்திருந்தபோது பறிமுதல் செய்து ராமநாதபுரம் வனத்துறையில் ஒப்படைத்துவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மஞ்சள் பறிமுதல்
தொண்டி அருகே வீரசங்கிலிமடம் கடற்கரையில் இலங்கைக்கு மஞ்சள் கடத்துவதாக மெரைன் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் இரவு தேவிபட்டினம் மெரைன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் அய்யனார், கணேசமூர்த்தி மற்றும் போலீஸார் வீரசங்கிலி மடம் கடற்கரையில் சோதனையிட்டனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக ஆட்டோவில் 7 மூட்டைகளில் வைத்திருந்த 350 கிலோ சமையல் மஞ்சளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக ஆட்டோவில் இருந்த தொண்டியைச் சேர்ந்த கலந்தர் அலி (28), கலந்தர் ஆசிக் (29), கலந்தர் மைதீன் (25), ரஹ்மான் (27) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒரு ஆட்டோ, ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை தொண்டி சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago