திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் பாலூர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் லோகநாதன். இவர், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பண மோசடி குறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘ஆம்பூரைச் சேர்ந்த நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எனது நண்பரான பால்ராஜ் என்பவர் மூலம் வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் தியாகராஜன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு எனக்கு அறிமுகமானார்.
சில மாதங்கள் கழித்து தியாகராஜன் என்னை சந்தித்தபோது திருச்சி மாவட்டம் திருவாணைக்கால் சிவராம் நகரைச் சேர்ந்த சந்திரசேகரன் (46) என்பவர் கத்தார் நாட்டில் எண்ணெய் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் அவர் முதலீடு செய்துள்ளதால் ஆண்டு தோறும் பெரிய தொகை லாபமாக கிடைப்பதாக கூறினார். மேலும், சந்திர சேகரன் நடத்தி வரும் எண்ணெய் நிறுவனத்தில் என்னை முதலீடு செய்ய வற்புறுத்தினார். பள்ளி ஆசிரியர் என்பதால் அவர் சொன்னதை நான் முழுமையாக நம்பினேன்.
கடந்த 2013-ம் ஆண்டு சந்திரசேகரனை எனக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு நான் எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்ய தொடங்கினேன்.
2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 1 கோடியே 16 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை நான் சந்திரசேகரன், அவரது மகன் கணபதிசுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான திருச்சியைச் சேர்ந்த குமரவேல், மணப்பாறையைச் சேர்ந்தவேல்முருகன், சென்னையைச் சேர்ந்த நாகராஜன் ஆகியோரிடம் பணத்தை கொடுத்தேன்.
எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏறத்தாழ 9 ஆண்டுகள் கடந்த நிலையில், அதற்கான லாபம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் கூறவில்லை. எனவே, நான் முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர்கள் என்னை ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், என்னைப் போலவே அவர்கள் பலரிடம் பணம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைக் கூறி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த சந்திரசேகரன், அவரது மகன் கணபதிசுப்பிரமணி, குமரவேல், நாகராஜன், வேல்முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து என் பணத்தை மீட்டுத் தர வேண்டும்’’ என மனுவில் குறிப் பிட்டிருந்தார்.
இந்த மனு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு எஸ்.பி.,சிபிசக்கரவர்த்தி நேற்று உத்தரவிட்டார். அதன்பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago