வேலூர் சத்துவாச்சாரியில் மணல் கடத்தும் நபரிடம் ஆய்வாளரின் பெயரை கூறி 40 இன்ச் எல்இடி டிவி வாங்கிய புகாரில் காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குள் மணல் கடத்தல் தடையில்லாமல் நடந்து வருகிறது. மாட்டு வண்டிகள், இரு சக்கர வாகனங்களில் மூட்டைகளில் மணலை கடத்தி வருகின்றனர்.
ரங்காபுரம் பகுதியில் தொடங்கி பெருமுகை பாலாற்றங்கரை வரை மணல் கடத்தல் நடை பெறுவதற்கு காவல் துறையினர் சிலரும் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல் ஆய்வாளரின் பெயரை கூறி மோசடி
இதற்கிடையில், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல்நிலை காவலர் தினகரன் என்பவர் காவல் ஆய்வாளரின் பெயரை கூறி மணல் கடத்தும் நபர் ஒருவரிடம் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 40 இன்ச் எல்இடி டிவி வாங்கியுள்ளார்.ஆனால், டிவி வாங்கி கொடுத்த நபரை அடுத்த சில நாட்களிலேயே காவல் ஆய்வாளர் கருணாகரன் கைது செய்துள்ளார். அப்போது, டிவி வாங்கிக் கொடுத்த தகவலை ஆய்வாளரிடம் அந்த நபர் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் கருணாகரன், தான் யாரிடமும் டிவி வாங்கவில்லை என்று கூறியதுடன் காவலர் தினகரன் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும், மணல் கடத்தல் நபரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
எல்இடி டிவி வாங்கியது குறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விசாரணை நடத்தி அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்தார்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் பெயரை கூறி 40 இன்ச் எல்இடி டிவி வாங்கிய முதல் நிலை காவலர் தினகரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago