காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
விழுப்புரம் அருகே காணை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்நிலையில் அப்பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஏற்கெனவே முடிக்கப்பட்ட ஒரு சில பணிகளுக்கும் அதற்குரிய தொகை ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனை கண்டித்து நேற்று முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்செல்வன் தலைமையில் அதிமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு சென்று அந்த அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் திமுகவினரை கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகத்தை சந்தித்து அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.அம்மனுவில் கூறியிருப்பது:
கடந்த அதிமுக ஆட்சியில் காணை ஒன்றியத்தில் ரூ.100 கோடி மதிப்பில் சாலை பணிகள், குடிநீர் பணிகள், தனிநபர் வீடு உள்ளிட்ட 70 பணிகளுக்கு முறையாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்நிலையில் அந்த பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் கிடப்பிலேயே உள்ளது. அந்த பணிகளை உடனே ஆரம்பிக்க வேண்டும். அதுபோல் ஏற்கெனவே தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்ட பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். இந்த அனைத்து பணிகளையும் 2 நாட்களில் தொடங்க வேண்டும். மக்களுக்கான வளர்ச்சி பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும். இல்லையெனில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago