மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து ஜூலை 26-ல்நடைபெற இருந்த ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, மன்னார்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக கர்நாடகா அரசு சட்டவிரோத நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பிரதமரும், ஜல்சக்தித் துறை அமைச்சரும் அரசியல் லாபம் கருதி, கர்நாடகாவுக்கு ஆதரவளித்து வருகின்றனர். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமனம் செய்யாததுடன், தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படவிடாமல் முடக்கிவருகின்றனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவரை சந்தித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உடனடியாக நிரந்தர தலைவரை நியமித்து, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். மேகேதாட்டு அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்த மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதை வரவேற்கிறோம். இந்த சந்திப்பை ஏற்று ஜூலை 26-ம் தேதி நாங்கள் நடத்துவதாக இருந்த ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம்.
மேலும், கர்நாடகாவில் எடியூரப்பா அரசு கலவரத்தைத் தூண்டிவிட முயற்சிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்தும் குடியரசுத் தலைவரிடம் முதல்வர் முறையிட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago