நெல்லை அரசு மருத்துவமனை - தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மனு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிய 94 பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு விவரம்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் தற்காலிகமாக பணியாற்றி வந்தோம். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி முதல் எங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டனர். எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிரந்தர பணி வழங்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள ஊதியத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத் தலைவர் மாரியப்பன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:

திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் பலகோடி வரை முறைகேடு நடைபெற்று வருகிறது. எனவே, மதுபாட்டில்களை விற்பனை செய்யும் போது ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா இருக்கன் துறை ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனு:

எங்கள் பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளில் பயன்படுத்தப்படும் ரசாயன வெடிபொருட்களால் குடியிருப்புகளில் விரிசல்கள் விழுகின்றன. நீர்நிலைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்களுக்கான நீர்வரத்து தடைபட்டிருக்கிறது. குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

கல்குவாரிகளுக்காக இயக்கப்படும் கனரக வாகனங்களால் சாலைகள் சேதமடைந்து மற்ற வாகனங்கள் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல்மாசுபட்டு மக்களின் சுகாதாரம்கேள்விக்குறியாகிவிட்டது. எனவே, கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து பூஜாரிகளுக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க கோரிக்கை

பூஜாரிகள் பேரமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் மாவட்டத் தலைவர் அய்யனார் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

அதில், ‘கிராமம் மற்றும் நகர்ப்பகுதிகளில் பூஜை செய்து வரும் அரசின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயன் அடையாத பூஜாரிகள் ஆயிரக்கணக்கானோர் தற்போது உள்ள அரசாணைப்படி கரோனா நிவாரண நிதி பெற முடியாத நிலை உள்ளது. அனைத்து பூஜாரிகளும் பயன் பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

வருமானம் இல்லாமல் பணியாற்றி வரும் பூஜாரிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பூஜாரிகள் ஓய்தியம் பெறும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூஜாரி இறக்க நேரிட்டால் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் வருவாய் இல்லாத கோயில்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும். பூஜாரிகள் நலவாரியத்தை உயிர்பெற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் சார்பில் அந்த மாவட்ட எல்லைக்கு உட்பட்ட கிராமக் கோயில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணெய், நைவேத்தியத்துக்கு அரிசி வழங்கும் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். சொந்த வீடு இல்லாத பூஜாரிகளுக்கு அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்