தொகுப்பு வீடு வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மூன்றாம் பாலி னத்தினர் நேற்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாநகர், மாரியம்மன் கோயில் தெரு, வானவில் நகர், புதுத் தெரு உள்ளிட்ட பல இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தினர் வசிக்கின்றனர். அவர்கள், அனைவரும் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். ‘தொகுப்பு வீடு’ கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உட்பட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இந்நிலையில், தொகுப்பு வீடு வழங்கக்கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டத்தில் மூன்றாம்பாலினத்தினர் நேற்று ஈடுபட்டனர். காய்கறிகள், மளிகைப் பொருட்கள், அடுப்பு, காஸ் சிலிண்டர் மற்றும் ஆடுகளுடன் சுமார் 25 மூன்றாம்பாலினத்தினர் திரண்டனர். மேலும், அவர்கள் தங்குவதற்கு தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டது. பின்னர் அவர்கள், அடுப்பை பற்ற வைத்து மதிய உணவு தயாரிக்கும் பணியை தொடங்கினர்.
இப்போராட்டம் குறித்து ராதிகா நாயக் கூறும்போது, “திருவண்ணாமலை அண்ணா நகர், மாரியம்மன் கோயில் தெரு, வானவில் நகர், புதுத்தெரு உட்பட பல பகுதியில் 150-க்கும் மேற்பட்ட மூன்றாம்பாலினத்தினர் வசிக்கிறோம்.
வாடகை வீடுகளில் வசித்து வரும், எங்களால் தொடர்ந்து வாடகையை செலுத்த முடிய வில்லை. மேலும், வீட்டு வாடகையும் உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே விலைவாசி உயர் வால் அவதிப்படும் நாங்கள், வாடகையும் உயர்த்தப்படுவதால் சிரமப்படுகிறோம். இதனால் எங்களுக்கு தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என பல ஆட்சியர்களிடம் மனு கொடுத்து முறையிட்டுள்ளோம். ஆனால், நடவடிக்கை எடுக்க வில்லை. அனைவருக்கும் தனித்தனியே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என கேட்கவில்லை. குறைந்த எண் ணிக்கையில் கட்டிக் கொடுத்தால் கூட, உதவியாக இருக்கும்” என்றனர்.
சமையல் பணியில் ஈடுபட்டிருந்த மூன்றாம்பாலினத்தினரிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்க உதவி செய்வதாக கூறி, கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த திருநங்கைகள், அரசாங்க ஊழியர்களாகிய உங் களுக்கு, அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. எங்களுக்கு எந்த சலுகைகளும் கிடையாது. சமுதாய மக்களும் புறக்கணிக்கின்றனர். தொகுப்பு வீடு கிடைக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம்” என்றனர்.
இதையடுத்து, மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் (பொறுப்பு) கந்தன், கோட்டாட்சியர் வெற்றிவேல் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது அவர்கள், “நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர் களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. நீங்கள் அனைவரும் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இணையுங்கள். அதன்பிறகு, உங்களுக்கு தொகுப்பு வீடுகள் விரைவாக கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தனர். இதனையேற்று, குடியேறும் போராட்டத்தை மூன்றாம் பாலி னத்தினர் கைவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago