சுற்றுச்சூழலை பாதுகாக்க குறுங்காடுகள் வளர்க்க வேண்டும் : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சுற்றுச்சூழலை பாதுகாத்திட மியாவாக்கி முறையில் அதிக குறுங்காடுகளை வளர்க்க வேண்டும் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என்.தர் வலியுறுத்தி உள்ளார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட அரசு அலுவலக வளாகங்கள், வணிக வளாகங்கள், அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களின் குடியிருப்பு பகுதி ஆகிய இடங்களை பி.என்.தர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அரசு அலுவலக வளாகங்களை சுற்றியுள்ள செடி, கொடிகள் வளராத வண்ணம் தூய்மையாக பராமரித்திட வேண்டும். அரசு அலுவலகத்தில் உருவாகும் மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை முறையாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்திட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் உருவாகும் மக்கும் கழிவுகளை குடியிருப்பு வளாக பகுதியிலேயே இயற்கை உரம் தயாரித்து, மாடித் தோட்டத்தில் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

பின்னர், நகராட்சி மயான வளாகத்தில் நவீன எரிவாயு தகனமேடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதை மீள்ஆய்வு செய்தார். இவ்வளாகங்களில் பூமாலை கழிவுகள் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்தி மயானத்தில் வெளிப்புறப் பகுதிகளில் சாலையோரப் பூங்கா அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறி வுறுத்தினார். தொடர்ந்து, கச்சிராயப்பாளையம் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான வி.ஐ.பி. கார்டன் மனைப்பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ள பூங்கா பகுதியில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நகர பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்த அதிக அளவில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகளை வளர்த்து பேணிக் காத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் என்.குமரன், கள்ளக்குறிச்சி நகராட்சி பொறியாளர் து.பாரதி மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்