வழக்குப்பதிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தால் வழக்குகளை விசாரணை செய்வது துரிதம் அடைந்துள்ளது என கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகர காவல்துறையில், முன்பு சட்டம் ஒழுங்கு பிரிவினர், சி.ஆர்.பி.சி பிரிவு வழக்குகள், அடிதடி, போராட்டம், ஆர்ப்பாட்டம், கொலை, கொலை முயற்சி போன்ற சட்டம் ஒழுங்கு சார்ந்த இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளுக்கு (ஐ.பி.சி) உட்பட்ட வழக்குகள் ஆகியவற்றை விசாரித்து வந்தனர். அதேசமயம், குற்றச் சம்பவங்கள் சார்ந்த ஐ.பி.சி பிரிவு வழக்குகளை குற்றப்பிரிவு காவலர்கள் விசாரித்து வந்தனர். பாதுகாப்புப் பணி, ரோந்துப் பணி போன்றவற்றில் ஈடுபடுவதால், சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், சி.ஆர்.பி.சி, ஐ.பி.சி வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் ஆகிறது, முழுக்கவனம் செலுத்த முடிவதில்லை, வழக்கு விசாரணைகள் தேக்கமடைகின்றன என புகார்கள் எழுந்தன.
இதனால், கடந்த ஜூன் மாதம் முதல் கோவை மாநகர காவல்துறையில் வழக்கு பதியும் முறையில், சில மாற்றங்களை காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் அமல்படுத்தினார். அதாவது, ‘சட்டம் ஒழுங்கு பிரிவு காவலர்கள் இனி ஐ.பி.சி பிரிவு வழக்குகளை விசாரிக்க மாட்டார்கள். அனைத்து ஐ.பி.சி பிரிவுகள் தொடர்பாக வழக்குப்பதிவு மட்டும் செய்வர். பின்னர், அந்தக் கோப்புகளை விசாரணைப் பிரிவு (முந்தைய குற்றப்பிரிவு) காவல்துறையினரிடம் ஒப்படைப்பர். அவர்கள் வழக்கை விசாரிப்பர். வழக்குகளின் புலன் விசாரணை திறம்படவும், விரைவாகவும் நடக்க இம்மாற்றம் கொண்டு வரப்படுகிறது,’’ என அவர் உத்தரவிட்டிருந்தார். இம்முறைப்படி தற்போது மாநகர காவல்துறையில் வழக்குகள் பதியப்படுகின்றன.
இதுதொடர்பாக மாநகர காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், தங்களிடம் வரும் ஐ.பி.சி பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து புகார்கள் மீதும் வழக்குப்பதிந்து, அந்த வழக்குக்கோப்பை விசாரணைப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். விசாரணைப் பிரிவினர், அந்த வழக்கு விசாரணையை கவனித்து, குற்றப்பத்திரிகை தயாரித்தல், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
சி.ஆர்.பி.சி பிரிவுகளை மட்டும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர். மாநகர காவல்துறையில் 15 விசாரணைப் பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு விசாரணைப் பிரிவு காவல் நிலையத்திலும் இன்ஸ்பெக்டர் முதல் காவலர்கள் வரை குறைந்தபட்சம் 18 பேர் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் வேறு பணிகளிலும் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். விசாரணைப் பணியை மட்டும் தொடர்ச்சியாக மேற்கொள்வர். இத்திட்டம் காவல்துறையினரிடம் வரவேற்பை பெற்றுள்ளதோடு, வழக்கு விசாரணையும் விரைவாக முடிவடைய உதவுகிறது. இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து, வாரத்துக்கு ஒருமுறை காவல் ஆணையர் ஆய்வு செய்கிறார். அதேசமயம், இத்திட்டம் அமலுக்கு வரும் முன்பு சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் தாங்கள் பதிவு செய்த, ஐ.பி.சி பிரிவு சார்ந்த வழக்குகளின் விசாரணையை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago